இலங்கையின் தலைநகரில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் அதிகளவில் வாழ்வதற்கு அனுமதித்துள்ளோம் என கோட்டபாய ராஜபக்க்ஷ தெரிவித்திருப்பது முற்றிலும் இனவாதத்தை தூண்டும் செயல் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவத்துள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் வாழ்வது இன்று நேற்றல்ல. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் கொழும்பில் வாழ்கிறார்கள். கொழும்பை ஒரு வர்த்தக தலைநகராக வளர்த்தெடுத்த பெருமை தமிழர்களையே சாரும். அதிகளவிலான ஏற்றுமதியின் ஊடாக கொழும்பின் வர்த்தக பரபரப்பை அதிகரித்தவர்கள் தமிழர்களே..
இன்று கொழும்பில் தமிழர்களும் முஸ்லீம்களும் அதிகளவில் வாழ்வதை அவதானிக்கத் தொடங்கியிருக்கிறது சிங்கள பேரினவாத சக்திகள். கொழும்பில் தமிழர்கள் வாழ்வது இன்றைய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்குத் தந்த விசேட சலுகை அல்ல என்பதை இன்றைய இனவாதத்தை தூண்டும் பேரின சக்திகள் தெரிந்துகொள்ளுங்கள் என்று, மூன்று மொழிகளிலும் மொழி பெயர்த்து தைரியமாக நேர்கொண்ட பார்வையில் நேற்று மாலை கொழுபில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கெமராக்களை பார்த்து மனோ கணேசன் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையின் பாரம்பரிய, அரசியல், சமூக ரீதியாக தமிழர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி தெரியாமலேயே காலி முகத்திடலுக்கு எதிரே உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்றலில் உள்ள பொன் ராமனாதனில் சிலைக்கு மாலை அணிவித்து வருகிறார்கள். ராமநாதன் அருணாசலம், போன்றோர் யார் என்பதை முதலில் இவர்களுக்கு படிப்பிக்க வேண்டும். இலங்கையின் வரலாற்று முன்னோடிகள் பற்றிய அறிவை இனவாதிகளுக்கு படிப்பித்தால் மட்டுமே இலங்கைக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியப்படுத்த முடியும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
