2008 க்குப் பின்னர் முதன் முதலாக இந்திய பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளிடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த T20 கிரிக்கெட் போட்டியினை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்திய பிசிசிஐ - பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் முறையாக 20 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு பகல் ஆட்டமாக நடந்த இந்தப் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளிடையே நடைபெறுவதால் பெருத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மைதானத்தில் நிரம்பி வழிந்தனர்.
எதிர்பார்த்தது போன்றே நேற்றைய போட்டியின் இறுதி கட்டம் மிகுந்த பரபரப்புடன் இருந்தது. இறுதி இரு ஓவர்களில் ஆட்டம் யாருக்கும் சாதகமாக அமையலாம் என்ற துடிப்புமிக்க கட்டத்தை எட்டிய நிமிடத்தில், கேலரியில் இருந்து ஆட்டத்தைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் இதய வலியால் துடித்ததைத் தொடர்ந்து, மைதானத்திலிருந்த ஆபத்து ஊர்தியில் ஏற்றப்பட்டு மல்லையா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்த ரசிகரின் பெயர் கமல் ஜெயின் என்பதும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி தொழில் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருடன் கிரிக்கெட் பார்க்க வந்திருந்தவர்கள் ஜெயினின் மரணத்தின் போது உடன் இருந்தனர். அவர்கள் இது குறித்து கூறும்போது,
"போட்டியை கமல் ஜெயின் ரசித்து பார்த்தார். பாகிஸ்தான் விளையாடியபோது அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது" என்றனர். "தோல்வியின் விளிம்பில் இந்தியா சென்று கொண்டு இருப்பதை காண சகிக்காத அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்" என்று பெங்களூரு துணை கமிஷனர் ரவிகந்தே கவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையிலான போட்டி, இந்தியாவுக்கு இழப்பைத் தந்ததோடு ஒரு உயிரையும் பலிவாங்கிவிட்டது துரதிஷ்டவசமானது.
