துர்வாடையுடன் வரவேற்கும் நாப்பிரித்தை.... - பிரதேச சபை உறுப்பினர்களே இது உங்கள் கவனத்திற்கு!


திஹாரிய நாப்பிரித்தை (பண்டார நாயக பிளேஸ்) பிரதேசத்திற்கு உள்வாங்கும் பிரதான பாதையின் தொடக்கத்திலே இருக்கும் குப்பைகள் நாப்பிரித்தை பிரதேசத்திற்கு  வரும் மக்களுக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நகரசபை பாதை சுத்திகரிப்பு  வாகனங்கள் வந்து சுத்திகரிப்பு செய்தாலும் அந்த வாகனங்கள் தினமும் வருவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி சுத்திகரிப்பு செய்யப்படாமல் இருக்கும் சமயத்தில் இவ்விடத்தில் போடப்படும் குப்பைகள்  நாய்களால் கிளறப்பட்டு பாதையின் நடுவே இழுத்துப் போடப்படுவதால் இந்த  இடம்  மிகவும் அசுத்தமாக காணப்படுகின்றது. அத்துடன் இவ்விடத்தில் உள்ள  நடைபாதையால்  பிரயாணிக்கும் மக்கள் மிகுத்த சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.


இது அனைத்திற்கு மேலாக இந்த இடத்தில் அமைந்திருக்கும் அரச பாடசாலையான அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவர்கள் இதனால் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்விடத்தில் இருந்து வெளியாகும்  துர்நாற்றத்தால் காற்று  மாசுபடுத்தப்படுகின்றது. இதனால் பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பிரதேசத்தில் குப்பைகளை போடுவதற்கு ஒரு குப்பைத் தொட்டி அல்லது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் குப்பைகளை போடுவதற்கு ஒரு இடத்தை அமைத்தோ, இப்பிரதேசத்தை நோய்கள் பரவாது, துர்நாற்றம் வீசாது  தூய்மையான அழகிய பிரதேசமாக வைப்பதற்கு ஊர்மக்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.

திஹாரிய  வாழ் பிரதேச சபை உறுப்பினர்களே இது உங்கள் கவனத்திற்கு!

Post a Comment

Previous Post Next Post