கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் பல
பாகங்களிலும் பெய்து வந்த அடைமழை காரணமாக பல்வேறு இடங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மண்சரிவு மற்றும் பலத்த காற்று
காரணமாகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்கள் மீண்டும்
பாதிப்புக்குள்ளாயின. மேற்குறித்த காலநிலை மாற்றத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல இடங்களில் உயிர் உடைமைகளையும் இழந்தனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
கணிப்பீட்டின்படி 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மோசமான பாதிப்புகளுக்கு
உள்ளாகியுள்ளனர். இதுவரை 47 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 135 வீடுகள்
முற்றாக சேதமுற்றுள்ளன.
நாட்டின் பரவலான இடங்களில் வெள்ள
ஏற்பட்டிருந்த போதிலும் குறிப்பாக சில மாவட்டங்கள் அதிகளவிலான
பாதிப்புக்குள்ளாயின. அம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை, வவுனியா,
முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் இவ்வாறு அதிக பாதிப்புக்குள்ளான
மாவட்டங்களாகும்.
பாதிப்புக்குள்ளான மேற்படி மாவட்டங்களில்
அபிவிருத்தி மற்றும் நிவாரணத்திற்கான செரண்டிப் நிறுவனம் (எஸ்எப்ஆர்டி)
அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
தற்காலிகமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும்
பல்கலைக்கழங்களிலும் தங்கியிருந்த தென் மாகாண மக்களுக்கு சமைத்த உணவுகளும்
இதர தேவைகளும் இனங்காணப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன.
வட மாகாணத்தின் வவுனியா மன்னார் போன்ற
மாவட்டங்களில் பல பிரதேசங்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டன. இங்குள்ள
மக்களுக்கு சமைத்த உணவு, மருத்துவம், சுகாதாரப் பொதிகள், உலருணவு, அன்றாடம்
வீட்டுக்குத் தேவையான பொருட்களை எஸ்எப்ஆர்டி வழங்கியதுடன் தேவையான
சந்தர்ப்பங்களில் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மூதூர்,
ஏறாவூர், காத்தான்குடி போன்ற இடங்களுக்கு சமைத்த உணவு, உலருணவு, சுகாதாரப்
பொதிகள் மற்றும் நடமாடும் வைத்திய முகாம்களை எஸ்எப்ஆர்டி ஏற்பாடு செய்தது.
சிலாபம், மாதம்பை, புத்தளம் பகுதிகளில்
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணறுகள், வீடுகள், பன்சல,
கோவில், பாடசாலை, பள்ளிவாசல் போன்ற இடங்களை சிறந்த முறையில்
சுத்தப்படுத்தும் பணிகளையும்; எஸ்எப்ஆர்டி மேற்கொண்டது.



