5 நிமிடத்தில் 50 மில்லியன் கொள்ளை! பெல்ஜியம் நாட்டில் சம்பவம்


மிகப்பெரிய வைரக் கொள்ளை, 8 முகமூடிக் கொள்ளையர், வெறும் 5 நிமிடத்தில் 50 மில்லியன் டாலர் வைரத்தை கொள்ளை அடித்துவிட்டு மாயமாகியுள்ளனர். இந்த துணிகர கொள்ளை நடந்தது, ஆளரவம் அற்ற இடத்தில் அல்ல, பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரெசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில்...

விமானத்துக்குள் பயணிகள் இருந்த நிலையில், ஏர்போர்ட் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்த நேரத்தில், விமானத்தின் கார்கோ ஹோல்டில் இருந்த வைர பார்சல்களை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றார்கள் கொள்ளையர்கள். இந்த கொள்ளை நேற்று முன்தினம் இரவு நடந்திருக்கிறது. நேற்று மாலையில்தான் வைரங்கள் கொள்ளையிடப்பட்ட விபரம் போலீஸால் உறுதி செய்யப்பட்டது.

பெல்ஜியத்தில் இருந்து இரவில் சுவிட்சலாந்து செல்லும் ஹெல்வெட்டிக் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், செக்கின் செய்து முடிந்து விமானத்தில் ஏற தயாரானார்கள். இந்த விமானத்தில், 50 மில்லியன் டாலர் பெறுமதியுள்ள வைரங்கள், கார்கோ மூலம் அனுப்பப்படுகின்றது என்ற விபரம் பயணிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், வேறு யாருக்கோ தெரிந்திருக்கிறது. அவர்கள்தான் துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை அடித்திருக்கிறார்கள். முகமூடிக் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பின்னர்தான் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தின் பாதுகாப்பு இரும்பு வேலியை ஓடிச் சென்று பார்த்தார்கள். பாதுகாப்பு வேலி, வேன் உள்ளே வரும் அளவுக்கு துல்லியமாக வெட்டப்பட்டு இருந்தது.

Post a Comment

Previous Post Next Post