ஈரானின் விண்கலம் மூலம், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டால் முதல் ஆளாக நான் செல்ல தயாராக இருக்கிறேன் என்று ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமத் நிஜாத் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் குரங்கை விண்வெளிக்கு அனுப்பி ஈரான் நாடு சோதனை நடத்தியது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு உயிருடன் திரும்பியதன் மூலம் தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ராக்கெட் சோதனை என்ற போர்வையில் ஈரான், ஏவுகணை தயாரிக்கலாம் என்று சந்தேகிக்கின்றன.
இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி குறிப்பிடுகையில், "எங்கள் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பினால் விண்வெளி திட்டத்தில் வெற்றி கண்டு வருகிறோம், விண்வெளிக்கு குரங்கு அனுப்பப்பட்டதை மேற்கத்திய நாடுகள் நம்ப மறுக்கின்றன, ஈரான் விண்கலம் மூலம், விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டால் முதல் ஆளாக நான் செல்ல தயாராக இருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிப்பதாக உலக நாடுகள் சந்தேகிப்பதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்
